Saturday, August 17, 2013

( நேத்ரா தொலைக்காட்சி யில் கடந்த 22.07.2013 அன்று இப்தார் நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற எனது கவிதை )

ரமழான் எனும் மருத்துவம்


பனியில் குளித்து
காற்றில் உலர்த்தும்
ரோஜாவாய்
சடசடக்கும் மனதுடன்
கவிதைக்கு காதீந்து
பார்த்திருக்கும்
நேத்ரா நேயர்கள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் !

ரமழானை ஈன்றளித்து
அதன் இறுதி நாளில்
மகிழ்வளித்து
மறைந்திருக்கும்
இறைவனுக்கே எல்லாப் புகழும்
அல் ஹம்துலில்லாஹ்

குரான் ஓதல் ,
இறைவனை தொழுதல் ,
பசித்திருத்தல்
மூன்றும் நோன்பின்
முக்கிய முகங்கள் !
முக்கிய அமல்கள் !

வைத்தியம்: வார்த்தைகளாக வந்தது
அது குரான் !
வைத்தியம்: தேகப்பியாசமாக வந்தது
அது தொழுகை !
வைத்தியம்:வயிற்றுககாய் வந்தது
அது நோன்பு !
வைத்தியம் கவிதையாகிறது .

வானம் : இறை மருத்துவன் எழுதித்தந்த
மருந்துச் சீட்டு !
அதனால்தான் வானத்தை பார்த்தே
நோன்பு தொடங்குது,முடியுது!

நிலவைத் தேதித்தாளாக தெரிந்த
நமக்குத் தெரிவதில்லை
நிலா மேகக் கடதாசியில் மடிக்கப்பட்ட
மாத்திரைஎன்று !

உலகின் நோய் தீர்க்க
வருடத்துக்கு பனிரெண்டு மாத்திரைகள்
மனிதின் பிணி தீர்க்க
வருடத்துக்கொரு வில்லைதான் !

சக்காத்:மனிதனின் மருத்துவச் செலவீனம்
வயிறு
பிணிகளின் முகாம் என்பதனால்தான்
வைத்தியம் வயித்திளிருதே தொடங்குது!

ஈவு,இரக்கமற்றது வயிறு
பசியால் எத்தனைபேரை
கள்வனாக்கியிருக்கிறது
எத்தனைபேரை
கொலைகாரனாக்கியிருக்கிறது
எத்தனை பேரை அனாவசியமாய்
சிறைச் சாலை அனுப்பியிருக்கிறது !

காலா காலமாக
மனிதன் அதிகம் தோற்றது
அவனது வயிற்றிடம்தான் !
அந்த வயிறு தோற்றதே நோன்பிடம்தான் !

நோன்பு ஏழைகளின்
பிரதான மருந்து
சுமையான நோய்களுக்கு
சுகமான மருந்து !

ஆங்கில மருத்துவம் அறிய இந்த
நோன்பு மருத்துவத்தில்
ஆயிரம் இருக்கிறது !

சுகாதார அமைச்சோடு
கோபம் எனக்கு !
நோய்களுக்கு எதிராய்
குப்பை கூளங்களை அகற்றச்செயும் நீர்
தொன்றுதொட்டு தேங்கிக்கிடக்கும்
வயிறுகளையும்
சுத்தி கரிக்கச் செய்யாததட்காய் !

மருத்துவர்களோடும்
மனவருத்தம்
வேளைக்கு மாத்திரையைப்
பரிந்துரைக்கும் நீர்
நோன்பையும்
மருந்தாகச் சொல்லாததட்காய் !

நோன்பு இறை மருத்துவன் கைக்
கத்தரிக்கோல் !
அதுதான்
மனிதனை பாவ சவ்வுகளை
சத்திர சிகிச்சையால் அகற்றி விடுகிறது
நோன்பு
வெட்டாமல் குத்தாமல் செய்யும்
லேசர் கதிர் மருத்துவமும்தான் !
பணத்தால் விளையும்
தலைக்கனக் கட்டிகளை
உள்ளுக்குள் வைத்தே
உடைத்து விடுகிறது !

சக்காத் :
மனோ தத்துவ வைத்தியம்
தானம் உயிர் காக்கும்
என்ற நம்பிக்கையில்
நம்பிக்கைவைத்த வைத்தியம் !

பிந்திய பத்தில்
லைலதுல் கதிர் வருவது ஏன் தெரியுமா ?
வழங்கப் பட்ட வைத்தியத்தின்
விளைவை அறியத்தான் !
'லைலதுல் கத்ர்'
இறை வைத்தியன் நோயாளியை
பக்கத்தில் அழைத்துப் பரிசோதிக்கும் நாள் !

இப்படியாக
ஒரு நோய் எதிர்ப்பு மாதத்தையே
மார்க்கத்தின் அங்கமாக்கியது
இஸ்லாம்தான் !

Friday, December 30, 2011

கூடு வரைதல்






















நான் ஒரு குயில் போல அலைபவன்
பாவம் என்றும் சொல்லலாம்
ஒரு கூட்டை வரைவது குறித்த
எனது பார்வை விசித்திரமானது
அதை எங்கிருந்து தொடங்குவது
எங்கே முடிப்பது என்பதற்கு அப்பால்
மனதின் வரை படத்தை
அதன் வசீகரம் கெடாது
எப்படி ஈன்றெடுப்பது
என்பதில் எழும் கேள்விகள்
வாதப் பிரதி வாதங்கள்
சவால்கள்
கூடு வரைவது குறித்த
எனது கனவையே
புறம் தள்ளி விடுகின்றன
ஆனால்
மனத்தைக் கூடாக்கும்
சிரமத்தைத் தவிர்த்து
தான் வரைந்ததையெல்லாம்  
மனதாக்கிக் கொண்டவர்கள்
கூடுகளை
வரைந்து கொண்டே இருக்கிறார்கள்
நான் அவர்களின்
கூடுகளைப் பார்த்து
கேள்விகளை மாத்திரம்
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்
என்கூடு மட்டும்
என் மனதுக்குள்ளேயே கிடக்கிறது  
வரையப் படாமல்

எஸ்.நளீம்
16.10.2011

Saturday, December 17, 2011

பாணிச் சேவல் குரல் எழுப்பித் தொண்டை கம்மி ...



தன்  பரட்டைத் தலை விரித்து எழும்பாதா?
எங்கிலும் மூடு பனி 
மரம் சார்ந்த பச்சை இருள் 
சற்று சிவப்பாகி 
மீண்டும் மீண்டும் நீல இருள்
வானம் ஒரு குப்பைத் திடல் 
கசக்கி வீசிய முகில் குவிந்து 
கழுத்து வரைக்கும் வெள்ளம் 
நான் அதிகாலைப் பாணிச் சேவல் 
குரல் எழுப்பித் தொண்டை கம்மிப் பலன் என்ன 
வெளுக்காத கிழக்கில் 
உதய சூரியன் கவிழ்ந்து 
ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா?
எங்கிலும் குப்பை குப்பை ....

நன்றி 
(உயிர்மை -இந்தியா )
மார்ச் -2006







Saturday, September 24, 2011

வசப்படாத வாழ்வைக் கட்டமைத்தல்


உடலை உலுக்கும்
ஒரு நொடிப் பொழுதாய்
எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது
என்னைப் பார்த்து
தகிக்கும் இந்த நெருப்பில்
தீ மூட்டியது நான் இல்லை தான்
வார்த்தைகளைப் பொறுக்கிக் கோர்க்கையில்
ஆகி விட்டது
உனக்கும் எனக்குமான ஏதோவொன்று

விசிலடித்து வரவழைக்க
வராத
எம்மைக் கடந்து செல்கிற காலத்தில்
வசீகரமற்ற  ஒரு வாழ்வாய்
கனவின் ஒவ்வொரு படிகளிலும்
சறுக்கிக் கொண்டேயிருக்கும்
என் இருப்பை
யாரால் அறுதியிட முடியும்.?

மனதை உருக்கும் உன் வாசகங்களுக்கு
என்னிடம்
ஆறுதலாய் ஒரு பதிலில்லாத போது
அம்மோ…. என்றாகிவிடும்
உன் வாழ்வு குறித்த பிராந்தி
என்றென்றும்
என் பயண நெடுகிலும்
என் பாதங்களைக்
குதறியபடி தொடர்கின்றன

யதார்த்தத்துடன் வசப்படாத
ஒரு வாழ்வை
கட்டமைப்பதில் ஏன்
இத்தனை பிரயாசை கொள்கின்றாய்

ஏன் இன்னும் கடந்து போன
காலங்களையே
கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றாய்.

 எஸ். நளீம்

Thursday, July 7, 2011

நிலா வந்து இருள் தின்று...


குருவி இரத்தம் போல் வடிந்து
கரைகிறது கடலில்
கொழியறுக்கிறதா வானம்
இல்லை நாம் இதுவரை சிந்திய குருதியை  
சேர்த்துத் தெளிக்கிறதா ?
இல்லை இனி இருளில்லை என்றே
தங்கள் தங்கள் வீடேகும் நம் உறவு ரத்தம்

இருபது வருடங்கள்
மகிழ்வா அல்லது துயரமா
சூரியனே உன் விருந்து யாருக்கு ?
மௌனத்தின் குழந்தைகளாய்
இறக்காத சுமைகளோடு மீள்கிறோம்
பிறந்த மண்ணுக்கு

ஒரு இரவை இழுத்துவர
இரத்தம் சிந்தி உழைக்கின்றாய் வானமே
நீயும் எங்கள் சாதி

பாவம்
முட்டையிட்டும்
கொக்கரிக்கா எங்கள் பேடுகள்
இனிச் சேவல்ப் பூச் சிவப்பாய்
சிவக்க வேண்டாம் ஓய்வுகொள் நீ

நிலா வந்து இருள் தின்று
பால் பருகும் பூமி
நிசப்தத்தைக் கொல்லாத தித்திக்கும் நொடிகள்.

எல்லாப் புகழும் ஒருவனுக்கே
இது தொடரட்டும்
இத்துடன் என் 'ஈறல்' கவிதை சாந்தி கொள்கிறது
அந்தப் பரட்டைக் கவிஞன் இல்லாத போதும்.
அவன் கிடக்கான்
அவன் நடிகன்.

நன்றி; எங்கள் தேசம்
  

சிந்தனைக்கு


உனக்கு நீ மூட்டும் தீ
"ஏஸ் ரே"யில் வீழ்வது
 கருகிய உன்சுவாசத்தின் சாம்பல் ...

Sunday, May 29, 2011

வெளியேற்றம்

மனதில் ஒரு கல்லாய் நீ விழுந்தாய் 
அதில் சிதறிய நீராய் 
வெளியே கிடந்தாய் 

எஸ்.நளீம்