Tuesday, July 27, 2010

இருள் ஒதுங்கும் மூலை



அடுப்புப் பூனைபோல்
தன் உடல் சுருட்டி
உன் குடிசை மூலை பார்த்துத்தான்
இருள் ஒதுங்கும்
இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய்
மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய்
விடுதலை வேண்டி
கிழக்கு மீளும்
உனக்கு மீட்சி....
அவர்கள் உனைக் கொளுத்தும் ஒளியிலேனும்
உன் சுயம் காண்
தேர்தல்கள் தோறும்
நிறம் பூசிக் கொண்ட
உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
வரி செலுத்த நீ பிரஜை
இங்கே வாழ மட்டும் நீ யார்...?

எழுத்தாய் உதிரும் நாம்



மனதில் அடைகாத்து
உயிர்த்தெழுந்து பறக்கும்
அக்கவிதையிலிருந்து
தன்னை விடுவித்து வீழ்கிறது
இறகுகள் - அது நான்
மிக மென்மையாய் காற்றிலசைந்து
அது உன் கைக்கெட்டியதா
உதிரி எழுத்தாய்
என்னைத்தான்
உதிர்த்துக்கொண்டுமிருக்கிறேன்
கண்டுகொண்டாயா
உன் பெயரில் என் எத்தனை எழுத்துக்கள்
இப்படியாய் நம்மைக் கலைத்துப்போடும்
அழகு இலட்சணங்களிலிருந்துதான்
நம்மைநாம் வரைந்தாக வேண்டும்
திக்குத்தெரியாத இடத்தில் நீ
நான் எங்கே
ஒரு மலர்ச் செண்டு வாழ்த்து அட்டை
காகிதமாகவேனும்
இல்லையேல்
ஒரு ஈமெயிலாகவேனும் வருவாயா
என் முகவரிக்கு
காத்திருக்கிறேன்
நான் எழுதி முடிக்கவேண்டும் நம்மை