Thursday, March 11, 2010


தடுப்பு முகாமில்

செடியில் பூக்களும் இல்லை
சிட்டுகளும் வருவதில்லை
கொத்துக்கொத்தாய் உதிர்ந்தபின்


காதல்

பட்ட மரத்தில்
ஊரும் கடியான்கள்
அதனைப் பிரிந்த உயிர்

Friday, March 5, 2010


பிறழ்வு

துப்பாக்கி மனிதர்களின்
காலடி ஓசைக்கு நாய்கள் குரைத்த
ஒரு
இருண்மை இரவின் பின்தான்
ஊமையாகிப் போனான்
வானம் முட்ட
உரிமையைப் பறைந்த அவன்

இன்னுமொரு தேசியகீதம்

கொத்துண்டு
குருதி சிந்தி
காக்கை கூண்டில்
குயில்க் குஞ்சாய் நாம் வளர்ந்தோம்
செடியில் விடுவித்து
ஆடி அசைந்துவிழும்
மலர் போல
எம் விடுதலையை வடிவமைப்போம்
விழுந்தாலும்
வேரூன்றி
விருட்சமாய் உயிர்த்தெழுவோம்
augest2005

இருக்குக் கதிரிலிட்ட மழை முட்டை

ஊர் தூங்கும்
கரு இரவின் பிற்பாதிக்
குளிரிலும் மனவெம்மை
அயலெல்லாம் துப்பாக்கியேந்திப் பிரசன்னம்
குருதிப் புனலெலாம் கிளி கவிந்து
திருடனின் அந்தப்புரத்தில்
தனித்துத் தவித்திட்ட ஜீவிதம்
நத்தைகள் ஊரும் அகநிலத்தில்
எதை விதைப்பேன்
குஞ்சு பொரித்துப் பறக்கா
இருக்குக் கதிரிலிட்ட மழை முட்டை
நாக பாம்பாட்டம் கொத்திக் குடிக்கும்
சூரிய கிரணக் கீற்று
பின் தொடரும் மரண பயக் காலமதாய்
நாள் நீளும்
அருகே கண்ணுறங்கும்
நிலா குஞ்சின் முகம் பார்த்து
ஆகாய விழி பிதுங்கி ஒரு சொட்டுச் சொட்டாதா
அது வீழ்ந்தால்
மனதில் சிர்ரென்று நீர் கருகும்
மடித்த கையில் கண் வளரும்
மனையாளின் தலை நீவி
உயிர் சிலிர்ப்பி முத்தமிட
உதவாத இரவாச்சு
மூளைக்குள் நசிபட்டு
வெட்டுக்கிளி உதைக்கும் உயிர் வெளியில்
நரம்புளகி நலிவுற்ற
மனதெழுப்பிக் கவிபாட முடியா
போர் முனைப் படையணியாய்
மண் கிழித்து வெளிப்பட்டு
விரைந்த்தோடி மடியும் ஈசலதா மனித வாழ்வும்

septempar2006

ஒட்டிக் கொண்டிருக்கிறோம் நீரில்

எதேர்ச்சையாய் குனிந்தேன்
நட்சத்திரச் சிதறல்களோடு
நிலாவே என் தலைக்கு
ஒளி வட்டமான அதிசயத்தில்
மகிழ்ந்தேன்
கால் தடுக்கி கல்விழ
நொறுங்கிச் சிதறிய
நிலவும் நானும்
மீளவும்
ஒட்டிக் கொண்டிருக்கிறோம்
அதே நீரில் .......

திடு திடுத்த மழை இரவின் காலை

தவத்தில் கண்டெடுத்த வார்த்தைகளடுக்கி
ஒரு அழகுக் கலைஞன்
பூமியில் இருந்தெட்டி
அகலக் கால் பதித்தான் வானத்தில்
பச்சை கொடிகள் சுற்றிப் படர்ந்து
வானம் வரைக்கும் வளர்ந்தன பசுமை
தடையின்றி
இப்போது வானத்தில்
பூமி தொங்கிக் கொண்டிருந்தது
வானம் ஒரு பட்டம் போல் பறக்க
ஆகாயம் கரைந்து
பூமியில் இறங்கும்
ஒரு திடு திடுத்த மழை இரவில்
பூமி தரிசனம் நிகழ்ந்திருந்தது
கொடிகளைப் பற்றியபடி
இறங்கியிருந்தான்
ஊர் செழித்திருந்தது
காலையில் கண் விழித்தால்
ஊர் முழுதும் அவன் காலடிகள்