Friday, March 4, 2011

கொடூரங்களால் ஆனது



மழை பிதுக்கிய மணலில்
முளைக்கும் காளான்
காளான்களல்ல
வஞ்சகத்தால் புதையுண்ட
ஒரு சரித்திரத்தின் எச்சம்
அது
மீளத் துளிர்க்கும் சோகம்
சிரிக்காதே
உன் கன்ன மேட்டில்
கவிழ்ந்து தெரியும்
அவன் மண்டையோடு
உன் கடவாயில் நீட்டித் தெரியும்
அவள் எலும்புகள்
மௌனத்தைக் கிழித்து விரியும்
எம் மரண ஓலம்
எல்லாமே
காட்சியாகும்
கொடூரங்களால் ஆனது உன் முகம்
குடியானவனின்
முகங்களில் முகம் பார்க்காத
உன் முகம்
வன்மம் மிகைத்த தென்றால்
உன்னில் எது அதி உத்தமம்
உன் மூச்சுக் காற்றால்
கருகும் பயிர்கள்
எரியும் குடிசைகள்  
முறிந்துவிழும் பனைகள்
பால் வற்றிய மார்புகளுடன்
பீறிட்டழும் குழந்தைகள்
இன்னும்
வற்றிய குளங்கள்
செத்த கால் நடைகள்
பிணவாடை சுமக்கும் காற்று
துப்பாக்கி தின்று மிஞ்சிய சுவர்கள்
ஒரு ஏரி போல 
ஒரு நதி போல
ஒரு புல்த்தரை போல
ஒரு பனித்துளி போல
உன்னில் கனிவுதேடி
அலைகிறதென் கவிதை
எத்தனை அவலங்களால் ஆனது
உன் முகம் ?
எஸ்.நளீம்