Saturday, September 24, 2011

வசப்படாத வாழ்வைக் கட்டமைத்தல்


உடலை உலுக்கும்
ஒரு நொடிப் பொழுதாய்
எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது
என்னைப் பார்த்து
தகிக்கும் இந்த நெருப்பில்
தீ மூட்டியது நான் இல்லை தான்
வார்த்தைகளைப் பொறுக்கிக் கோர்க்கையில்
ஆகி விட்டது
உனக்கும் எனக்குமான ஏதோவொன்று

விசிலடித்து வரவழைக்க
வராத
எம்மைக் கடந்து செல்கிற காலத்தில்
வசீகரமற்ற  ஒரு வாழ்வாய்
கனவின் ஒவ்வொரு படிகளிலும்
சறுக்கிக் கொண்டேயிருக்கும்
என் இருப்பை
யாரால் அறுதியிட முடியும்.?

மனதை உருக்கும் உன் வாசகங்களுக்கு
என்னிடம்
ஆறுதலாய் ஒரு பதிலில்லாத போது
அம்மோ…. என்றாகிவிடும்
உன் வாழ்வு குறித்த பிராந்தி
என்றென்றும்
என் பயண நெடுகிலும்
என் பாதங்களைக்
குதறியபடி தொடர்கின்றன

யதார்த்தத்துடன் வசப்படாத
ஒரு வாழ்வை
கட்டமைப்பதில் ஏன்
இத்தனை பிரயாசை கொள்கின்றாய்

ஏன் இன்னும் கடந்து போன
காலங்களையே
கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றாய்.

 எஸ். நளீம்