Tuesday, January 19, 2010


பல்லிகள் இல்லாத சுவரில் மேயும்
வண்ணத்துப் பூச்சிகள்


வெளியில் முகம்
காட்டி
செடிகள் படர்ந்தன
பச்சிலைப் பாம்பின் உயிர்ப்புடன்
காற்றிறுகிய சதுர அறைக்குள் என்ன இருந்தன
அந்த கதவு ஜன்னலின் துவார வழியால்
கனிவு கசிந்தது
இப்போ
வெளிச் சுவர்களெல்லாம்
கொடிகளை விளைத்தது
கொடிகளெல்லாம் பூக்களை விதைத்தது
பூக்களெல்லாம்
வண்ணத்துப் பூச்சிகளைப் பூத்தது
பல்லிகள் இல்லாத சுவரில் மோதி மோதி
மலர்களைப் புணர்ந்து காற்று மணந்தது
தட்டத் தட்டத் திறக்காத அறை திறந்தது
உள்ளே
பேனா ஊன்றிய தாளுடன்
ஒரு கவிதை இருந்தது
நம் சுதந்திரத்தைப் பாடியபடி
(2009)

Monday, January 18, 2010



அறைக்கு வந்த வண்ணாத்தி

இள வயதுப் பழக்கம் உனைக்கண்டேன்
வயது சுருங்கி
ஆறு வயதில் நான் இப்போ
அழைத்துச் செல்லவா எனைத் தேடி நீ வந்தாய்
எண்பதில் நாம் வாழ்ந்த காடு எங்கிலும் வீடு
உன் பிறப்பும் இருப்பும் தவரைப் பற்றை
அல்லது அது விருட்சம்
உங்களின் உலகம்
பூக்களில் பூவாய் பூத்திருப்பாய்
நான் கிள்ளிப் பிடிக்க நீ பறப்பாய்
கிளை முறித்து உன்னை அடிப்பேன்
வாலிலே நூல் முடிந்து பறக்க வைப்பேன்
ஈர மண்ணில் கூடு கட்டி
அடைத்து வைப்பேன் ஐயோ
நீ காந்திய வாரிசு
அகிம்சையின் அமைவிடம்
வெஞ்சினம் உனக்கு இல்லை திருப்பித் தாக்க
குத்தித் தாக்க கொடுக்குமில்லை
நீ கார்த்திகையில் புழுவானாய்
மார்கழியில் பூவானாய் எப்படி
பின்
பக்தி முத்தி வர்ணம் கலைத்து வேள்ளையானாய்
ஒரு நாள் ஒன்றுகூடி
ஊர் வலமாய் பறந்தீரே
வண்ணாத்தி வண்ணாத்தி
நானும் குந்த இடம் தாயேன் உன் முதுகில்
ஹஜ்ஜா, உம்ராவா
கதிர்காம யாத்திரையா
வண்ணாத்தி வண்ணாத்தி
மீண்டும் மீண்டும் வந்து போயேன் என்னறைக்கு
பால்ய காலப் பசுமையை
என்னிடம் பகிர்ந்து செல்லேன்


Saturday, January 16, 2010


அலகு தீட்டி சுள்ளி முறித்து

காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை
காக்கை என்று கழித்தாயோ
முற்றம் வந்து குறிசொல்லி
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்
மரக்கிளையில் அலகு தீட்டி
சுள்ளி முறித்துப் பறக்கும்
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ
நான் என்ன குறைந்த்தவனா
உற்றுப் பார்க்கும் கண்கண்டு
கூடு காத்து குழந்தை காத்து
போராடி வாழ்பவன்தான்
புயல் காற்றில் பேயாடி
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக் குடும்பம்
வீதியிலே வெட்டையிலே
புத்தளத்துப் புழுதியிலே
அகதியென அரவணைக்க யாருமில்லை
கொவ்வைப் பழ வாய் விரித்து
உம்மா என்னும் என் குஞ்சு பொன் குஞ்சு
காற்றாடி களைப்படையும்
களைபடையா இறக்கையாலே
சுழன்றாடி காத்திருக்கேன்
மிருகம் நீ
உன் நெஞ்சில் காதலில்லை கவிதை இல்லை
வாழ்வோரை வாழவிட
ஈவு இரக்கமில்லை
உன்னையும் கொல்லுமது
ஒரு போதும் துப்பாக்கி துணையாகா

( விபவி முதல் பரிசு -2006)