Friday, December 30, 2011

கூடு வரைதல்






















நான் ஒரு குயில் போல அலைபவன்
பாவம் என்றும் சொல்லலாம்
ஒரு கூட்டை வரைவது குறித்த
எனது பார்வை விசித்திரமானது
அதை எங்கிருந்து தொடங்குவது
எங்கே முடிப்பது என்பதற்கு அப்பால்
மனதின் வரை படத்தை
அதன் வசீகரம் கெடாது
எப்படி ஈன்றெடுப்பது
என்பதில் எழும் கேள்விகள்
வாதப் பிரதி வாதங்கள்
சவால்கள்
கூடு வரைவது குறித்த
எனது கனவையே
புறம் தள்ளி விடுகின்றன
ஆனால்
மனத்தைக் கூடாக்கும்
சிரமத்தைத் தவிர்த்து
தான் வரைந்ததையெல்லாம்  
மனதாக்கிக் கொண்டவர்கள்
கூடுகளை
வரைந்து கொண்டே இருக்கிறார்கள்
நான் அவர்களின்
கூடுகளைப் பார்த்து
கேள்விகளை மாத்திரம்
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்
என்கூடு மட்டும்
என் மனதுக்குள்ளேயே கிடக்கிறது  
வரையப் படாமல்

எஸ்.நளீம்
16.10.2011

Saturday, December 17, 2011

பாணிச் சேவல் குரல் எழுப்பித் தொண்டை கம்மி ...



தன்  பரட்டைத் தலை விரித்து எழும்பாதா?
எங்கிலும் மூடு பனி 
மரம் சார்ந்த பச்சை இருள் 
சற்று சிவப்பாகி 
மீண்டும் மீண்டும் நீல இருள்
வானம் ஒரு குப்பைத் திடல் 
கசக்கி வீசிய முகில் குவிந்து 
கழுத்து வரைக்கும் வெள்ளம் 
நான் அதிகாலைப் பாணிச் சேவல் 
குரல் எழுப்பித் தொண்டை கம்மிப் பலன் என்ன 
வெளுக்காத கிழக்கில் 
உதய சூரியன் கவிழ்ந்து 
ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா?
எங்கிலும் குப்பை குப்பை ....

நன்றி 
(உயிர்மை -இந்தியா )
மார்ச் -2006