Thursday, July 7, 2011

நிலா வந்து இருள் தின்று...


குருவி இரத்தம் போல் வடிந்து
கரைகிறது கடலில்
கொழியறுக்கிறதா வானம்
இல்லை நாம் இதுவரை சிந்திய குருதியை  
சேர்த்துத் தெளிக்கிறதா ?
இல்லை இனி இருளில்லை என்றே
தங்கள் தங்கள் வீடேகும் நம் உறவு ரத்தம்

இருபது வருடங்கள்
மகிழ்வா அல்லது துயரமா
சூரியனே உன் விருந்து யாருக்கு ?
மௌனத்தின் குழந்தைகளாய்
இறக்காத சுமைகளோடு மீள்கிறோம்
பிறந்த மண்ணுக்கு

ஒரு இரவை இழுத்துவர
இரத்தம் சிந்தி உழைக்கின்றாய் வானமே
நீயும் எங்கள் சாதி

பாவம்
முட்டையிட்டும்
கொக்கரிக்கா எங்கள் பேடுகள்
இனிச் சேவல்ப் பூச் சிவப்பாய்
சிவக்க வேண்டாம் ஓய்வுகொள் நீ

நிலா வந்து இருள் தின்று
பால் பருகும் பூமி
நிசப்தத்தைக் கொல்லாத தித்திக்கும் நொடிகள்.

எல்லாப் புகழும் ஒருவனுக்கே
இது தொடரட்டும்
இத்துடன் என் 'ஈறல்' கவிதை சாந்தி கொள்கிறது
அந்தப் பரட்டைக் கவிஞன் இல்லாத போதும்.
அவன் கிடக்கான்
அவன் நடிகன்.

நன்றி; எங்கள் தேசம்
  

சிந்தனைக்கு


உனக்கு நீ மூட்டும் தீ
"ஏஸ் ரே"யில் வீழ்வது
 கருகிய உன்சுவாசத்தின் சாம்பல் ...

Sunday, May 29, 2011

வெளியேற்றம்

மனதில் ஒரு கல்லாய் நீ விழுந்தாய் 
அதில் சிதறிய நீராய் 
வெளியே கிடந்தாய் 

எஸ்.நளீம்

வறுமை

காகம் கரைந்துகொண்டே இருந்ததால் 
திக்கென்றது மனது 
யாரும் வரக்கூடும் என்ற பயத்தில்

எஸ்.நளீம் 

Friday, March 4, 2011

கொடூரங்களால் ஆனது



மழை பிதுக்கிய மணலில்
முளைக்கும் காளான்
காளான்களல்ல
வஞ்சகத்தால் புதையுண்ட
ஒரு சரித்திரத்தின் எச்சம்
அது
மீளத் துளிர்க்கும் சோகம்
சிரிக்காதே
உன் கன்ன மேட்டில்
கவிழ்ந்து தெரியும்
அவன் மண்டையோடு
உன் கடவாயில் நீட்டித் தெரியும்
அவள் எலும்புகள்
மௌனத்தைக் கிழித்து விரியும்
எம் மரண ஓலம்
எல்லாமே
காட்சியாகும்
கொடூரங்களால் ஆனது உன் முகம்
குடியானவனின்
முகங்களில் முகம் பார்க்காத
உன் முகம்
வன்மம் மிகைத்த தென்றால்
உன்னில் எது அதி உத்தமம்
உன் மூச்சுக் காற்றால்
கருகும் பயிர்கள்
எரியும் குடிசைகள்  
முறிந்துவிழும் பனைகள்
பால் வற்றிய மார்புகளுடன்
பீறிட்டழும் குழந்தைகள்
இன்னும்
வற்றிய குளங்கள்
செத்த கால் நடைகள்
பிணவாடை சுமக்கும் காற்று
துப்பாக்கி தின்று மிஞ்சிய சுவர்கள்
ஒரு ஏரி போல 
ஒரு நதி போல
ஒரு புல்த்தரை போல
ஒரு பனித்துளி போல
உன்னில் கனிவுதேடி
அலைகிறதென் கவிதை
எத்தனை அவலங்களால் ஆனது
உன் முகம் ?
எஸ்.நளீம்

Saturday, February 12, 2011

சட்டத்திலடைக்கும் கோடுகள் ...



நாளின் வசீகரம் குறித்து
ஒரு உதயம் எழுதித்தரும்
நட்சான்றை
விசுவாசிப்பதில்லை மனது.
போர் ஓய்ந்த
புலரும் பொழுதிலும்
நம்பிக்கை இல்லை இன்றில்.
ஒருவர்
இறந்தால் என்ன ?
பிறந்தால் என்ன ?
குதூகலமற்ற வாழ்வில் ...
ஒரு பதுங்கு குழியை
தயார் செய்துகொண்டு
சட்டென மறையத் தெரிந்ததால்
ஒரு கடற்கரை நண்டு நாம்.
அனால் முடிகிறதா ?
அன்றாடம்
மேலும் மேலும் ...
நம்மைச் சட்டத்துக்குள்
அடைக்கின்றன
நேரும் கிடையுமாய்
நம்மில் விழும் கோடுகள்   

எஸ். நளீம்   
நன்றி :
"விடிவெள்ளி "
"வார்ப்பு "

Wednesday, October 27, 2010

விதி


 
எந்தக் குழந்தையும்
தெரிந்து வைத்திருப்பதில்லை
எத்தனையாவது தடவை ஊதும்போது
தன் பலூன் வெடிக்கும் என்பதை.
எஸ்.நளீம்