Wednesday, October 27, 2010
Tuesday, July 27, 2010
இருள் ஒதுங்கும் மூலை

அடுப்புப் பூனைபோல்
தன் உடல் சுருட்டி
உன் குடிசை மூலை பார்த்துத்தான்
இருள் ஒதுங்கும்
இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய்
மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய்
விடுதலை வேண்டி
கிழக்கு மீளும்
உனக்கு மீட்சி....
அவர்கள் உனைக் கொளுத்தும் ஒளியிலேனும்
உன் சுயம் காண்
தேர்தல்கள் தோறும்
நிறம் பூசிக் கொண்ட
உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
வரி செலுத்த நீ பிரஜை
இங்கே வாழ மட்டும் நீ யார்...?
எழுத்தாய் உதிரும் நாம்

மனதில் அடைகாத்து
உயிர்த்தெழுந்து பறக்கும்
அக்கவிதையிலிருந்து
தன்னை விடுவித்து வீழ்கிறது
இறகுகள் - அது நான்
மிக மென்மையாய் காற்றிலசைந்து
அது உன் கைக்கெட்டியதா
உதிரி எழுத்தாய்
என்னைத்தான்
உதிர்த்துக்கொண்டுமிருக்கிறேன்
கண்டுகொண்டாயா
உன் பெயரில் என் எத்தனை எழுத்துக்கள்
இப்படியாய் நம்மைக் கலைத்துப்போடும்
அழகு இலட்சணங்களிலிருந்துதான்
நம்மைநாம் வரைந்தாக வேண்டும்
திக்குத்தெரியாத இடத்தில் நீ
நான் எங்கே
ஒரு மலர்ச் செண்டு வாழ்த்து அட்டை
காகிதமாகவேனும்
இல்லையேல்
ஒரு ஈமெயிலாகவேனும் வருவாயா
என் முகவரிக்கு
காத்திருக்கிறேன்
நான் எழுதி முடிக்கவேண்டும் நம்மை
Thursday, June 24, 2010
அலகு தீட்டி சுள்ளி முறித்து

காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை
காக்கை என்று கழித்தாயோ
முற்றம் வந்து குறிசொல்லி
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்
மரக்கிளையில் அலகு தீட்டி
சுள்ளி முறித்துப் பறக்கும்
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ
நான் என்ன குறைந்த்தவனா
உற்றுப் பார்க்கும் கண்கண்டு
கூடு காத்து குழந்தை காத்து
போராடி வாழ்பவன்தான்
புயல் காற்றில் பேயாடி
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக் குடும்பம்
வீதியிலே வெட்டையிலே
புத்தளத்துப் புழுதியிலே
அகதியென அரவணைக்க யாருமில்லை
கொவ்வைப் பழ வாய் விரித்து
உம்மா என்னும் என் குஞ்சு பொன் குஞ்சு
காற்றாடி களைப்படையும்
களைபடையா இறக்கையாலே
சுழன்றாடி காத்திருக்கேன்
மிருகம் நீ
உன் நெஞ்சில் காதலில்லை கவிதை இல்லை
வாழ்வோரை வாழவிட
ஈவு இரக்கமில்லை
உன்னையும் கொல்லுமது
ஒரு போதும் துப்பாக்கி துணையாகா
( விபவி முதல் பரிசு -2006)
மூன்றாமவனின் புலம்பல்
சொல்லுங்கள்
பூர்வீக மண்ணை விட்டும்
பிரிந்து போகிறேன்
சொல்லுங்கள்
இறந்து போகவும் சம்மதம்
சுட்டுக் கொல்லவேண்டுமா
சொல்லுங்கள்
பள்ளி வாசலில் வந்து
வசதியாய் வரிசையில் நிக்கிறேன்
வெட்ட வேண்டுமா
வாளை நீட்டுங்கள்
வந்து வீள்கிறேன்
ஒரு முறை கொன்று
ஆத்திரம் அட்ங்கவில்லையா?
அப்படியானால்
இறைவனை வேண்டி
மீண்டு மீண்டும் என்னை
உயிர்த்துத் தருகிறேன்
மேல மேலக் கொல்லுங்கள்
இசைந்து தருகிறேன்
உங்கள் பங்கர்களின் மண்சாக்காய்
என்னை அடுக்குங்கள்
மொட்டார் குண்டுகளுக்கு
என் மூழை சிதறட்டும்
சீலைத் துண்டாய்
சொர்ந்த்து கிடக்கிறேன்
என்னை எடுத்து
உன்கள் துப்பாக்கிகளைத்
துடைத்துக் கொள்ளுங்கள்
எப்படி வேண்டுமானாலும்
என்னைக் கொல்லுங்கள்
அதற்குமுன் சொல்லுங்கள்
நண்பர்களே
நீங்கள் நாடு கேட்கிறீர்கள்
அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள்
ஆனால்...
நான் என்ன கேட்டேன்?
இறக்கவும்... இழக்கவும்...
Thursday, May 20, 2010
குரைக்க ஒரு நாய் வேண்டும்
நாய் என்றால்
அது குரைக்க வேண்டும்
கடிப்பது இரெண்டாம் பட்சமே
கடிக்காததும் நாய்தான் - ஆனால்
குரைக்காதது நாயாகாது
கடிப்பது பாசிசம்
குரைப்பது ஜனநாயகம்
பல நாய்கள் கடித்த்துச் சாதிக்காததை
குரைத்தே சாதித்திருக்கின்றன
குரைக்க ஒரு நாய் வேண்டும்
எங்கள் நாய்களால்
குரைக்கவும் முடியவில்லை
கடிக்கவும் முடியவில்லை
குரைக்கின்ற
மற்ற நாய் களையும் விரட்டிவிட்டு
ஊர் நாய் என்பதையே
தகுதியாய்க் கொண்டு
இந்த இயலா நாய்களையே
வாசலில் கட்டினோம்
பாவம்
அது என்ன செய்யும்
நண்பன் வந்தாலும், எதிரி வந்தாலும்
நாய்க்குரிய பண்பில்
வாலை மட்டும் ஆட்டுது
( கடைசிச் சொட்டு உசிரில் ...2000 )
Wednesday, April 28, 2010

உயிரில் ஒட்டு வைத்து
சிரித்தால் எனக்கு மோட்சம்
பார்த்தால் பாக்கியம்
தொட்டால் உயிர்ப்பு
விட்டால் மரணம்
மழையாக நனையலாம்
உன் எச்சிலிலேயே
பனித்துளியாய் பருகலாம்
உன் வியர்வைத் தூறல்களையே
எப்படி வந்தது
முற்றத்து ரோஜாக்களிலேயே
உனது முகம்
மல்லிகைகளிNயே உனது மணம்
பௌர்ணமி நிலவில் உனது நிறம்
மனப்பூ சில்லிடும்
வாயால் உதிரும் வார்த்தை கேட்டு
புத்துயிர்க்கும் அங்கமெல்லாம்
உன் விரல் பட்டு
நீ செல்கின்ற காலடிகள்
மனசுக்குள் மையித்து ஊர்வலம்
திரும்பி வருகையிலே திருமணஊர்வலம்
உன் பல்குத்தும் குச்சியாகவோ
வாய் கழுவும் நீராவோ ஆகிறேன்
தந்த முத்தக் கடனுக்காக
சமையலறைக் கையுறையாகவோ
நகம் வெட்டியாகவோ ஆகிறேன்
சுட்டுவிரல் தேனை
சுவைக்கத் தந்த கடனுக்காக
பாதத்துக்கு செருப்பாகிறேன்
உடுத்திக் கொள்ள சேலையாகிறே;ன்
ஈன்ற கடனுக்காக
உயிரில் ஒட்டு வைத்து
என் உயிரை விளைவித்தவளே
தாய்க்குத் தாயாய்
கருவறையில் உனைச்சுமக்காமல்
எப்படித் தாயே என் கடன் தீரும்?
எஸ்.நளீம்- இலங்கை
Subscribe to:
Posts (Atom)
