Tuesday, April 20, 2010


அழகு தின்னிப் பறவை

விழி இரண்டும் சிறகடித்துப் பறக்கும்
இரட்டைப் பறவைகளாய்
அழகைக் கண்டதும் பொன்னி வண்டுபோல
அதில் மொய்க்கும்
ஆடு போல அனைத்தையும்மேயும்
புறாக்கள்போல
நட்சத்திரங்களைப் பொறுக்கியுண்டு
நிலாமுட்டியில் பாலருந்தித் திரும்பும்
ஆடுபோல்ஓரிடத்தில்குந்தி ஓய்வாய்இரை மீட்டும்
மீண்டும் இரவு விளக்கின் மங்கிய இருளில்
ஒதுங்கிய மாராப்பில் புகுந்து
கோழியாய்
எங்கனும் சீச்சிப் பொறுக்கித் தின்று
களைப்பில் மயங்கி விழும்.
எஸ்.நளீம் இலங்கை


சூரியன் இறங்கித் தலையில் குந்தி

என் பட்டு நிலா
நானில்லா வானத்தில் காய்கிறது
இரும்பாலான மனவுலக ஜீவிதம் இது
இறுகித் திண்மமாகி
கம்பியாய் நுழைகிறது
சுவாசக் காற்று
காலம் வேகம் கொண்டுரசி தீப்பற்றி
சூரியன் இறுகித் தலையில் குந்தி
மெழுகு வர்த்தியாய் நான்

எஸ். நளீம் - இலங்கை

சவால்

திருத்தித் திருத்தி வரைந்தாலும்
முடிவதில்லை கைகளுக்கு
எதேச்சையாய்
சிதறி வீழ்ந்த மைத்துளியின் அழகை.
எஸ். நளீம் இலங்கை.

ஆயிரத்தோர் இரவில்

பனிப் பெய்த ஓர் இரவும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும்
வாயிருந்தால்
பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில்
உன்னையும் இழந்திருந்தேன்
உள்ளுக்குள்
எங்கிலும் புகைகிறது துக்கம்
பிதுக்கி இழுக்க நார்போல
வந்து விடுமா
அன்று என் கண்ணில் ஒட்டிய துயரம்.

எஸ். நளீம் - இலங்கை

தலைக்குள் அணில்

சைக்கிளில் காலூன்றி
முற்றத்தில் நின்று
பாளை வெடித்துச் சிரிக்கிறாயே
யாரும் பார்த்து விட்டால்
கை வீசித்; துரத்து
காக்கை வந்து முட்டையிட்டு
குயில் குஞ்சு பொரிக்க
நீயென்ன பொதுச்சொத்தா
எனக்கு மாமி தந்த பிள்ளை
சீவிப் பேன் நீக்கி
உச்சியில் அள்ளி முடிந்த கேசம்
காற்றுக்குக் கலைந்தாடும்
ஆனால் உன் தலைக்குள் அணில்
பூ நட
வளைத்து நட்ட கற்களே
உன் காலுக்குக் கொலுசாகி
உன் இடுப்பு மடிப்பில் நடந்து
தொப்புள் தோண்டிய வண்டை
கிள்ளியெறி
வாட்ட சாட்டமாய்
வளைந்து நெளியும்
பருவச் சிறுக்கி
வயதுக்கு வந்து
காதில் அணிந்த மணப் பந்தல்;
காற்றுக்காடி உதிர்கிறது
குரும்பட்டி பருத்த மார்பாகி
உன் கக்கத்திலிருந்து
இள நீர் திருகும் என் ஆசை
பன்னாடைக்குள் பதுக்கு
உன் பருவச் செழிப்பை
நீ பால் தரும் தாயாகி
நாங்கள் குழந்தைகளாகி
சீ……வேண்டாம்
நீ தென்னையாகவே இரு
சூச்சூ......
அதோ மட்டையில் கிளி.

எஸ்.நளீம் - இலங்கை

இலை துளிர்த்துக் குயில் கூவும்

வளர்கிறாய் நீ
உன்னில் எனை வரைந்தே
என் வெற்று மார்பில் மயிர் பிடுங்கித் தாப்புக் காட்டு
முழுதாய் எனைக் காட்டும்
நிலைக் கண்ணாடி நீதாண்டி
பிஞ்சுக் கையில் நண்டாகி நரியாகி ஊர்கையிலே
மாதுளை வெடித்துச் சுளை சிதற
கலகலப்பாய் நீ
முன்னிரட்டைப் பல் காட்டி
வெள்ளைமுயல் துள்ளி
அணில்குஞ்சு ஊர்ந்த தென்னில்
மனம் சப்பாணிக் கொட்டும்
உன்னழகை எதில் காண்பேன்
கோடான கோடி அர்ததம் பொதிந்த
கவியொழுகும் கனிவு மொழி
ஒற்றைச்சொல்லில் உம்பா சொல்வாய்
உயிரை உருக்கும் உன் மொழியில்
செல்லங் கொஞ்சும் என்னசைவால்
செழித்தோங்கும் செவ்வருத்தை
மனம் நிறையப் பூக்க வைத்தாய்
தொட்டில் வைரம்
கரைசலாய் உயிரைக் கரைத்து
உன் காலில் தெளித்திருக்கேன்
வளர்க மகளே
என்றும் இலை துளிர்த்துக் குயில் கூவும்
நமக்குள்ளே!

தவளை கத்தும் மழை

வெள்ளமாய்

பொங்கிப் பிரவாகித்து அதன்பாட்டில்
கோடையின்றிக் கொட்டும் மழை
மூழ்குவோர் மூழ்க
நீந்துவோர் நீந்த
கரைசேர்க்க யாருண்டு
முகில் குவிந்த பவ்வல்
வான்சிவந்து இடி
தவளை கத்தி மழைஓயா
நீரை ஏவி விட்ட பூமி
முகிலாய் குவித்தவானம்
யார் யார்
ஊன்றுகோலற்ற கிழவன் வானம்
தள்ளாடும் பூமிக்கிழவி தகராறா?
புரிந்துணர்வு எங்குண்டு
சீலைப்பேன் புளுத்து
உடலெல்லாம் ஊரும் அவஸ்த்தை
சிந்தனைனயில் சீழ் கட்டி
தெறிக்கும் வலி
பழம்புண் ஆறா
அனைத்துக்கும் வெயில் வேண்டும்.