Tuesday, April 20, 2010


இலை துளிர்த்துக் குயில் கூவும்

வளர்கிறாய் நீ
உன்னில் எனை வரைந்தே
என் வெற்று மார்பில் மயிர் பிடுங்கித் தாப்புக் காட்டு
முழுதாய் எனைக் காட்டும்
நிலைக் கண்ணாடி நீதாண்டி
பிஞ்சுக் கையில் நண்டாகி நரியாகி ஊர்கையிலே
மாதுளை வெடித்துச் சுளை சிதற
கலகலப்பாய் நீ
முன்னிரட்டைப் பல் காட்டி
வெள்ளைமுயல் துள்ளி
அணில்குஞ்சு ஊர்ந்த தென்னில்
மனம் சப்பாணிக் கொட்டும்
உன்னழகை எதில் காண்பேன்
கோடான கோடி அர்ததம் பொதிந்த
கவியொழுகும் கனிவு மொழி
ஒற்றைச்சொல்லில் உம்பா சொல்வாய்
உயிரை உருக்கும் உன் மொழியில்
செல்லங் கொஞ்சும் என்னசைவால்
செழித்தோங்கும் செவ்வருத்தை
மனம் நிறையப் பூக்க வைத்தாய்
தொட்டில் வைரம்
கரைசலாய் உயிரைக் கரைத்து
உன் காலில் தெளித்திருக்கேன்
வளர்க மகளே
என்றும் இலை துளிர்த்துக் குயில் கூவும்
நமக்குள்ளே!

No comments:

Post a Comment